67. இந்திராவை மிரட்டிய கனவு
லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத் தீர்மானித்தது.
இந்தியாவிலிருந்து பத்துப் பன்னிரெண்டு சமஸ்தானப் பிரதிநிதிகள், இதர பிரிவினர்கள் சார்பில் ஒரு இருபது, இருபத்தைந்து பேர்கள் என மொத்தம் நாற்பத்தாறு பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டார்கள். அவர்களில் பி.ஆர்.அம்பேத்காரும் ஒருவர்.
1932 நவம்பர் 17-ஆம் தேதி துவங்கிய மூன்றாவது வட்ட மேஜை மாநாடு டிசம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டிலும், இந்தியாவுக்குச் சுய ஆட்சி, அதிகாரம் அளிப்பது குறித்து உருப்படியாக ஏதும் விவாதிக்கப்படவில்லை. இந்திய அரசு சட்டம் 1935 உருவாவதற்கு இந்த மாநாடு வழி செய்தது. அதற்காக ஓர் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
1933 ஆகஸ்ட் 30-ஆம் தேதி. நேரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். உடனே பூனா சென்று காந்திஜியைச் சந்தித்தார். காந்திஜியும், நேருவும் பேசினார்கள், பேசினார்கள், பல மணி நேரம் பேசினார்கள்.
Add Comment