நம் நாட்டில் சாதியும் மதமும் அரசியலின் துணைக் கருவிகள். சாதாரண மக்களின் ஆவேச உணர்ச்சியை எளிதாகத் தூண்டி, அமைதியைக் குலைப்பதற்கு இவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்ட நாள்களாக இங்கே உள்ளது. சாதிகளை ஒழிப்போம், மதவெறி இல்லா தேசத்தை உருவாக்குவோம் என்று யாராவது பேசுவார்களேயானால், அதுவும் ஓட்டு அரசியலின் ஓரங்கமே ஆகும்.
நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், எதிர்க்கும் INDIA கூட்டணியில் உள்ள கட்சிகளும் இப்போதிலிருந்தே இந்த இரண்டு ஆயுதங்களையும் எடுத்துக் ‘கூர் ஆய்வு’ செய்யத் தொடங்கிவிட்டன. ஒரு புறம் அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் சார்ந்த ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் 2047ம் ஆண்டு ஊழல், சாதி, மதவாதம் உள்ளிட்ட ‘தீய சக்திகளுக்கு’ இந்தியாவில் இடம் இருக்காது என்று பிரதமர் பேசுகிறார்.
திடீரென்று நரேந்திர மோடி மதவாதத்தைத் தீய சக்திகளின் பட்டியலில் இணைத்துப் பேசுவதைக் கண்டு இந்துத்துவர்களே குழம்பிப் போயிருக்கிறார்கள்.
அங்கே அது அப்படி இருக்க, இந்தப் பக்கம் சிறிது திரும்பிப் பாருங்கள். கேரள மக்களின் பண்டிகையான ஓணத்துக்கு நமது முதலமைச்சர் மலையாளத்தில் வாழ்த்து சொல்கிறார். மறுபுறம் அவரது மகனும் தமிழ்நாட்டு அமைச்சர்களுள் ஒருவருமான உதயநிதி ஸ்டாலின் சநாதனத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார். அவரது பேச்சு தேசம் முழுதும் பரவுகிறது. அயோத்தி கரசேவை சன்னியாசி ஒருவர் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்திக் கிழித்து, லைட்டர் கொண்டு பற்ற வைத்து எரித்துக் காலால் மிதிக்கிறார். அது போதாமல், உதயநிதியின் தலைக்குப் பத்துக் கோடி பரிசு அறிவிக்கிறார். இந்தத் தாலிபன் மனநிலையையும் ஆதரித்து, ஆரவாரம் செய்து அவருக்குச் சார்பாக ஒரு கூட்டம் குரல் கொடுக்கிறது.
இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்.
Add Comment