‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட கொரியாவிற்கு. இந்த இருவர் சந்திப்பின் விளைவுகளை உன்னிப்புடன் எதிர்நோக்குகின்றன உக்ரைனும் உலகமும்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில், இம்மாதம் 10-13 தேதிகளில் கிழக்குப் பொருளாதார மன்றம் நடக்கவுள்ளது. வடகொரியாவிலிருந்து 400 மைல், தனது பிரத்யேக, குண்டு துளைக்காத இரயிலில் பயணித்து, இதில் கலந்து கொள்கிறார் வடகொரிய அதிபர் கிம். ரஷ்ய அதிபர் புடின், இவருக்கு வரவேற்பளித்துச் சந்திக்கவுள்ளார். கொரோனாவிற்குப் பிறகான அதிபர் கிம்மின், முதல் வெளிநாட்டுப் பயணம் இது. இருவருக்கும் பரஸ்பர உதவிகளைப் பெற்றுத் தரப்போகும் சந்திப்பு. குண்டுகள், வெடிமருந்துகள் கொடுத்துதவும் வடகொரியா. பதிலுக்கு உணவு, எண்ணெய் மற்றும் இராணுவத் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் ரஷ்யா. ஒப்பந்தங்கள் விவாதிக்கப்படும்.
அதன் பின்னர் இருவரும், அருகிலிருக்கும் ரஷ்ய பசிபிக் கடற்படையின் கப்பல் துறையைப் பார்வையிடுவார்கள். தற்போதுகூட, நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்டு அணுஆயுதத் தாக்குதல் ஒன்றை சோதித்துப் பார்த்திருக்கிறது வடகொரியா. இதன் விதவிதமான ஆயுதச் சோதனைகளில், புதிய சேர்க்கை இது. ரஷ்யக் கடற்படை மாதிரிகளைக் கண்டு, குறிப்பெடுத்துக் கொள்ள இந்த மேற்பார்வை வசதியாக இருக்கும்.
தலைப்பே மர்ம நாவல் மாதிரி இருக்கே