இளைஞர்களைக் கவரக் கூடிய பிரசார வீடியோக்களை உருவாக்குவதில் பிரபலமான தீவிரவாத இயக்கம் ஒன்று. அவ்வீடியோக்களில் வருபவர்களின் முகம் அடையாளம் தெரியாதளவு முகமூடிகள் அணிந்து கொள்வதும் பொதுவான செயல்முறை. அப்படியான ஒரு இயக்கம் அவர்களுக்குத் தெரியாமலே அவர்களைப் பதிவு செய்து கொண்டது. அத்தகைய வீடியோவினை அண்மையில் சி.என்.என். நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோவில் என்ன இருந்தது? அதனால் வரக்கூடிய நன்மைகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கு முன்னர் அந்த இயக்கத்தைப் பற்றிய விவரங்களைச் சுருக்கமாக முதலில் பார்ப்போம்.
சி.என்.என். நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஐஎஸ்ஐஎஸ் எனும் தீவிரவாத இயக்கத்தின் வீடியோவாகும். மத்திய கிழக்கில் கலிஃபேட் எனும் ஒரு பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் நோக்கத்துடன் உருவான தீவிரவாத இயக்கமே இந்த ஐஎஸ்ஐஎஸ். இந்தக் கலிஃபேட்டை மிகவும் கடுமையான ஷாரியா சட்டங்களை அமல்படுத்தும் தேசமாக உருவாக்குவதே இவர்களது நோக்கம். இதை உருவாக்கியவர் முன்னாள் அல்கொய்தா உறுப்பினர்களில் ஒருவரான அபூ பக்கர் அல் பாக்தாதி எனும் ஈராக்கியர். இவ்வியக்கம் 2013/2014 காலங்களில் உருவாகி விரைவில் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் வேரூன்றியது.
இவ்வியக்கத்தில் அதிகமாக ஈராக்கிய சிரிய முஸ்லிம்கள் இருந்தாலும் உலகில் பல தேசங்களிலும் இருந்து இஸ்லாமியர்களை இவர்கள் உள்வாங்கிக் கொண்டன்ர். சமூக வலைத்தளங்களினூடாகப் பல நாடுகளிலும் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்யக் கூடிய காணொளிகளைப் பரப்பி அவர்களைத் தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டது உலகறிந்ததே. முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து பல இளைஞர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்தது இந்நாடுகளில் பரபரப்பான செய்தியாக ஒரு காலத்தில் வெளிவந்தன. இப்படியான ஆட்சேர்ப்பில் அவர்கள் ஆண்களை மட்டும் சேர்க்கவில்லை… இளம் பெண்களையும் சேர்த்தார்கள். இப்பெண்கள் அவ்வியக்கத்தின் உறுப்பினர்களின் மனைவிகளாக ஆக்கப்பட்டனர். மேற்குலக நாடுகளில் முழுச் சுதந்திரத்துடன் வாழும் யுவதிகள் மிகவும் கட்டுப்பாடுள்ள ஒரு இயக்கத்தில் போய்த் தன்னார்வத்துடன் சேர்வதென்பது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
Add Comment