ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும்.
ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார். ஹரியானாவைக் குறித்துப் பேச மறுக்கிறார். National Highway Authority of India நிறுவனம் சுங்கச்சாவடிகளில் விதிகளை மீறி 154 கோடி வசூலித்தது ஏன் என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பணத்தை எடுத்து, பிரதமரின் செயல்பாடுகள் சார்ந்த விளம்பரங்களுக்கு எவ்வாறு ஓர் அமைச்சகம் (ஊரக வளர்ச்சித் துறை) செலவு செய்யலாம் என்றால், பதில் இல்லை. துவாரகா எக்ஸ்பிரஸ் வேயில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்கப் பதினெட்டு கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணக்கு காட்டப்படும் செலவுத் தொகை 250 கோடி ரூபாய். இது ஏன் என்றால் பதில் இல்லை.
ஜி20 மாநாட்டைத் தலைநகரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது தேசியப் பெருமைதான். ஐயமில்லை. ஆனால், இதுநாள் வரை இல்லாத வழக்கமாக திடீரென்று நமது பிரதமரின் இருக்கைக்கு முன்னால் இருந்த பலகையில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்றி எழுதப்பட்டிருந்ததைக் கண்டோம். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் அங்கே இதனை வலியுறுத்தினால் அடுத்தக் கணமே இங்கே பெயர் மாற்றம் நடந்துவிடுகிறது. இதைக் கவனிக்க மட்டும்தான் பிரதமருக்கு நேரம் இருக்கிறது.
Well said. Aptly nararated the common man’s thinking and frustations with the current political scenerio with the Union government.