சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடைக்குச் செல்வதெனில் கோட்டை ரயில் நிலையத்தைவிட்டு இறங்கி நடந்து போகலாம். அல்லது ப்ராட்வே பேருந்து நிலையத்தில் இறங்கித் திரும்பி நடக்கலாம். முதல் வழியில் பரபரப்பான பர்மா பஜாரைக் கடந்துவர வேண்டியிருக்கும்.. இரண்டாவது வழி என்றால் நடைபாதையில் சிறுசிறு கடைகள். பழங்கள், வெங்காயம், காய்கறி என்று சில்லறை வியாபாரிகளால் நிறைந்திருக்கும் சாலையோரங்களைக் கடந்து பொறுமையாக நடந்துவர வேண்டியிருக்கும்.
சாலையோர வியாபாரிகளை சர்க்கஸ் செய்து கடந்தால், முதலில் கண்ணில் படுவது பூக்கடைகளாக இருக்கும் பத்ரியன் தெரு. இந்தத் தெரு முழுக்கவே பூ வியாபாரம் தான். பூக்களில் இத்தனை ரகங்களா என்று புருவங்கள் மேலேறும்.
மாலை அணிவித்து வரவேற்பதைப் போல் தெருவின் முகப்புக் கடைகள் மாலையை தயார் நிலையில் தொங்கவிட்டிருந்தன. எதிர்ப்புறமிருந்த கடையில் இரண்டு பெண்கள் சடை நாகம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். நல்ல மாலையை இருநூறுக்கு வாங்க முடியும். சடை நாகத்தின் ஆரம்ப விலை முந்நூற்றைம்பது. அதில் கேட்கும் டிசைனுக்கு ஏற்றாற்போல் விலை அறுநூறு வரை செல்கிறது. மேற்சொன்ன விலை எதுவும் நிரந்தரமில்லை. தங்கம் விலையைப் போல் அன்றாடத்தின் வரத்தைப் பொறுத்து மாறக்கூடியது.
Add Comment