அத்தியாயம் ஒன்று
தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும் மாற்று வரலாற்றுக் கதைகள் சில ஐயங்களை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு வேளை இக்கற்பனை நிஜமாகியிருந்தால்….
அமெரிக்காவைப் பங்கு பிரித்துக்கொண்டு, ‘நீ பாதி, நான் பாதி’ என்று ஜப்பானும், ஜெர்மனியும் ஆளும் கதையை விடுங்கள். மனித குலம் விண்ணைக் கொஞ்சம் சீக்கிரமாகவே தொட்டிருக்குமோ? இப்போதைக்கு விண்வெளியில் வீடு கட்டிக் குடிபெயர்ந்தே இருப்போமோ? அதுசரி…. ஹிட்லருக்கும் வானுக்கும் அப்படி என்னதான் தொடர்பு?
இரண்டாம் உலகப் போர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அது. பிரிட்டனை வீழ்த்தி, பிரிட்டிஷ் பிரதமரும் அன்றைய நேச நாடுகளின் பெரும் தலைவருமான வின்ஸ்டன்ட் சர்ச்சிலுக்கு ஆப்பு ஒன்றைச் சொருகியே ஆக வேண்டும் என்று ஹிட்லரின் நாஸிப்படைகள் நவீன யுத்த நுட்பங்களைப்பயன்படுத்திக் கொண்டிருந்தன. நாஸி ஜெர்மனிக்கு, ஜப்பான் தான் உற்ற நண்பன். ஹிட்லர் அவர் பாட்டுக்குக் கட்டளைகளை மட்டும் பிறப்பித்துக் கொண்டிருந்தார். ஏன், எதற்கு என்பவையெல்லாம் அவர் அகராதியிலேயே இல்லை. ஒழியாத யுத்தம்.
இந்நிலையில் அமெரிக்காவின் பர்ல் ஹார்பர் மீது வான் தாக்குதல் நடத்தி அமெரிக்காவை அபிசியலாய் யுத்த காண்டத்திற்குள் இழுத்தெடுத்தது ஜப்பான். ஐம்பூதங்களும் யுத்தக் கறையால் சாம்பலேறியிருந்தன. யார் வெற்றி பெறுவார்கள் என்பதைத் தீர்மானிப்பது மிகக் கடினமாக இருக்கிறது.
Add Comment