துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று இருந்ததே, அதை முதலில் தூக்க வேண்டும். நேசமற்ற இரண்டு நேச நாடுகளும் அடுத்தவர் கைக்கு ஏதும் போய் விடக் கூடாதே என்ற பதற்றத்தில் வேகவேகமாக இயங்கிக் கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் இந்தத் தேடுதல் வேட்டை கடும் தலைவலியாகி விட்டது. கிடைப்பதில் பாதிக்கு மேலான பொருட்கள், எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றே புரியவில்லை. நரம்புகளை ஒடுக்கும் இரசாயன ஆயுதங்கள், உயிரியல் குண்டுகள், ஹார்மோன் குப்பிகள் என்று புதிது புதிதாக ஏதோவொன்று வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. யாரிடம் எதைப் பற்றி விளக்கம் கேட்பது என்றே புரியவில்லை. அவற்றைக் கையாள்வதற்கும் பயங்கர நிபுணத்துவம் தேவைப்பட்டது. பேசாமல் மொத்தமாக எல்லா விஞ்ஞானிகளையும் ஏற்றிக் கொண்டு போனால் என்ன? ஆயுதங்களைக் கொண்டு போவதைவிட அவற்றைத் தயாரித்தவர்களை அமெரிக்காவுக்கே அழைத்துப் போய் உள்ளூரிலேயே அனைத்தையும் தயாரிக்கலாமே. அமெரிக்கா உடனே தயாராகிறது.
நாஸி விஞ்ஞானிகள் கூட்டம் கூட்டமாகக் குடும்பங்கள் சகிதம் நாடு கடத்தப்படுகிறார்கள். சோவியத் கையில் முக்கியமான எந்த விஞ்ஞானியும் சிக்கி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்கள் யூ எஸ் தரப்பினர். சுமார் ஆயிரத்து அறுநூறு விஞ்ஞானிகளையும் அவர்களது மனைவி மக்களையும் மிக ரகசியமான முறையில் மொத்தமாக அழைத்துப் போன இந்த விளையாட்டின் பெயர் ‘ஆப்பரேஷன் பேப்பர்க்ளிப்!”
Add Comment