எழுபதாண்டுகள் பணியாற்றிய பின்னர் தொண்ணூற்றிரண்டாவது வயதில் ஒருவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அது உலகெங்கும் பெரிய செய்தியாக அனைத்து ஊடகங்களிலும் வெளி வருகிறது. காரணம் ஊடகத்துறையில் ஒரு பெரும் வணிக சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பியவர் அவர் என்பதே. அந்தத் தொண்ணூற்றிரண்டு வயதில் தனது இரு பெரும் நிறுவனங்களான ஃபாக்ஸ் கார்ப்பரேஷன், நியூஸ் கார்ப்பரேஷன் ஆகிய ஊடகத்துறை நிறுவனங்களின் தலைமைப் பதவியான சேர்மன் எனப்படும் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவர் ரூபேர்ட் மெர்டொக். அவரது மகன் லக்லன் மெர்டொக் புதிய சேர்மென் ஆக இரு நிறுவனங்களிலும் பதவியேற்கிறார்.
ரூபெர்ட் மெர்டொக் தனது ஊடக சாம்ராஜ்யத்தின் மூலம் ஜனநாயக நாடுகளின் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்தவர் எனக் கருதப்பட்டு ஆங்கிலத்தில் ‘கிங் மேக்கர்’ என்றும் அழைக்கப்பட்டார். அவரது ஊடகங்களின் ஆதரவால் கட்சிகள் வெற்றி பெற்றனவா அல்லது வெற்றிபெறப் போகும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாரா என்பது விவாதத்திற்குரிய விஷயம். ஊடகத்துறையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளானவர். ஆனாலும் கிட்டத்தட்ட எழுபத்தையாயிரம் வாசகர்கள் கொண்ட ஒரு சிறு ஆஸ்திரேலிய மாநிலப் பத்திரிகையின் உரிமையாளராக ஆரம்பித்து உலகெங்கும் பல முக்கிய பத்திரிகைகளும் தொலைக்காட்சி நிறுவனங்களும் உள்ளடங்கிய மாபெரும் பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால் ரூபேர்ட் மெர்டொக் அவர்களது எழுபதாண்டு சேவையினை ஒரு சகாப்தம் என்று சொன்னால் மிகையாகாது. அவரது இந்த எழுபதாண்டு ஊடகத்துறைப் பாதிப்பு நல்லதா கெட்டதா என்பதை விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.
Add Comment