‘நல்லா இருந்தாம்பா! காலைல கேட்டா ஹார்ட் அட்டாக் அப்டிங்கறாங்க.’ ‘நல்ல நடிகர்ப்பா புனீத் ராஜ்குமார்- சாக வேண்டிய வயசா இது. ஓவர் எஸ்சர்சைஸ் பண்ணுவாராம். அங்கேயே போயிட்டார்.’ ‘எண்பது வயசுப்பா. ஆடாத ஆட்டமில்ல. குடி, புகை எல்லாம் உண்டு ஆனால் மனுஷன் இன்னும் கிண்ணுன்னு இருக்கார். எல்லாம் கடவுள் செயல்.’ ‘ரெண்டு பைபாஸ் பண்ணியாச்சு. பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு, ஓடிண்டிருக்குப்பா. ஹார்ட் அட்டாக்லாம் இப்ப ஒண்ணும் இல்லை’. இப்படி எத்தனை விஷயங்களை நாம் தினந்தோறும் கேட்கிறோம். பார்க்கிறோம்.
சமீபத்தில் பொது வெளியில் உலா வந்த ஒரு தகவலைப் படித்ததும் பகீரென்றது. கேரளாவில் இதய நோயாளிகள் அதிகரிப்பு. நான்கு மாதத்தில் நாற்பதாயிரம் பேர் சிகிச்சை. இப்படித் திடீரென்று இதய நோயாளிகள் அதிகரிக்க முடியமா. ஆமென்றால் அதற்குக் காரணம் என்ன? என்ன செய்யலாம், எப்படித் தவிர்க்கலாம்.? எப்படிச் சிகிச்சை எடுக்கலாம்.? என்னென்ன வாய்ப்புகள் நம் முன் உள்ளன.? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் பெற மதுரையின் மூத்த இதய நோய் நிபுணரான டாக்டர் அ. மாதவனைச் சந்தித்துப் பேசினோம்.
அவருடைய முதல் வரியே அந்த ஓடி விளையாடு பாப்பா தான். அந்தக் காலத்தில் கபடி, ஓடிப்பிடித்து விளையாடுவது, மரத்தில் ஏறி விளையாடுவது, என உடல் உழைப்புச் சார்ந்த விளையாட்டுகள் அதிகம். இப்பொழுது உடல் உழைப்பே மிகக் குறைந்துவிட்டது. சிறுவர்கள், பதின்ம வயதினர், பெரியவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். அவர்கள் உண்டு. அவர்கள் அலைபேசி உண்டு. அதுதான் உலகம் என்று வாழ ஆரம்பித்து விட்டார்கள். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளைக் கம்ப்யூட்டர், கீ போர்டு என்று அனுப்புகிறார்கள். இல்லையென்றால் கோச்சிங் கிளாஸ். பெரியவர்களைக் கேட்டால் நாங்கள் தினமும் வாக்கிங் போகிறோம் என்று சொல்வார்கள். வாக்கிங் போகிறேன் பேர்வழி என்று நடந்துவிட்டு ஒரு காப்பி குடித்து விட்டுத் திரும்ப வீட்டுக்கு வந்தால் அவ்வளவு தான்”.
Add Comment