இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம். காலிஸ்தான் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிவதன் மூலமாக இன்றைக்கு நடக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்ள இயலும்.
1940-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டு பாகிஸ்தான் என்ற தனி நாட்டுக்கான கோரிக்கை எழ ஆரம்பித்தது. அப்போதிருந்தே ஏன் சீக்கியர்களுக்கு என்றொரு தனி நாடு இருக்கக் கூடாது என்ற கேள்வியும் பிறந்தது. சுதந்திர இந்தியாவில் சீக்கியர்களுக்கான முக்கியத்துவம் கேள்விக்குறியாகும் என அவர்கள் பயந்தனர். கேள்வியில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால் இப்படி மத ரீதியாக ஒரு தேசம் துண்டாடப்படுவது சரியா? என்ற எதிர்க் கேள்வியும் எழுந்தது.
மொழி வாரியாக மாநிலங்களாகப் பிரிவதும் மத ரீதியாக நாடாகப் பிரிவதும் நிச்சயம் ஒன்றில்லை. எனில் சீக்கியர்கள் முன்வைக்கும் இந்தக் கோரிக்கைக்கு விடை காண வேண்டும் என்பது அப்போதையத் தலைவர்களின் தலையாயப் பிரச்னையாக இருந்தது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்தபோது மிகப்பெரிய மக்கள் திரள் அங்குமிங்குமாக இடம் பெயர்ந்தது. பஞ்சாபிலிருந்து ஏராளமான சீக்கியர்கள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஒன்றுபட்ட சீக்கியர்களுக்கான தேசம் அமையாமல் போனதற்கான மிக முக்கியமான காரணமாக இது அமைந்தது.
Add Comment