ஐக்கிய அமெரிக்கக் குடியரசின், 237 வருடச் சரித்திரத்திலேயே அதிர்ச்சியூட்டும்படியான ஒரு நிகழ்வு இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது. அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகளின் சபையின் (காங்கிரசின்) சபாநாயகர் பதவியிலிருந்து கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) வெளியேற்றப்பட்டார். அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து இத்தகைய குழப்பங்களுக்கு அஸ்திவாரம் இட்டது அவர் கட்சி உறுப்பினர்களே. அதிபர், துணை அதிபருக்குப் பிறகு மிகஅதிக அதிகாரம் கொண்டவர், மக்கள் பிரதிநிதிகளின் சபையான காங்கிரசின் சபாநாயகர். எந்த சட்டம் நிறைவேற வேண்டுமானாலும், எந்தத் திருத்த்ங்கள் செய்ய வேண்டுமானாலும், இவருடைய அனுமதி மிக முக்கியம். அமெரிக்காவின் மூன்று அதிகார மையங்களில் ஒன்றான அரசியலமைப்புச்சட்டங்கள் இயற்றும் (legislative branch)இன் தலைவர்.
இதுதான் என் நோக்கம், இலட்சியம் என உறுதியாக இருந்து பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு உங்களுக்கு நிறைவேறும் அந்த நோக்கம், ஒரே ஒரு நல்ல வினையால் இல்லாமல் போனால் எப்படி உணர்வீர்கள்? இதுதான், கெவின் மெக்கார்த்திக்கு நடந்தது. ஒரே நாளில் பதவி பறிக்கப்பட்டது!
கெவின் மெக்கார்த்தி அப்படி ஒன்றும் போதிமரத்துப் புத்தன் இல்லை. தன் சுய இலாபத்திற்காகப் பல முறை முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொண்டிருக்கிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் கடந்த தேர்தலுக்குப் பிறகு சொன்ன உண்மைக்குப் புறம்பான விஷயங்களை ஆதரித்தே வந்திருக்கிறார்.
Add Comment