நோர்வே நாட்டின் மேற்கு கரையோரப் பகுதியொன்றில் வண்டியோட்டியபடி சென்று கொண்டிருக்கிறார் அந்த 64 வயது முதியவர். அமைதி நிறைந்த அழகான நாட்டுப்புறத் தெருக்களில் தனிமையில் வண்டியோட்டிச் செல்வது அவருக்குப் பிடிக்கும். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உலகின் அதிஉயர் விருதுகளில் ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். சொல்லிவிட்டு, ‘தனியாக வண்டி ஓட்டுகிறீர்களா? பொறுமையாகப் பத்திரமாக வீட்டுக்கு சென்று சேருங்கள்’ என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அக்கறையோடு சொன்னது போல, அவருக்குப் பதற்றம் எல்லாம் ஒன்றும் இருக்கவில்லை. ஏறக்குறைய ஒரு தசாப்தமாக இந்த விருது சார்ந்த பல செய்திகளில் அவருடைய பெயரும் இருந்தது. ஆகவே அந்த விருது சார்ந்த பட்டியல்கள், அறிவிப்புகள் ஆகியவற்றுக்கு அவருடைய மனம் பழகிப் போய் விட்டது. எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காததால் இப்போது கிடைத்த வெற்றியும் அவருக்கு எந்தக் கிளர்ச்சியையும் அளிக்கவில்லை. இந்தச் செய்தி அவருக்குள் ஏற்படுத்தியது ஒரு தன்னிறைவை மட்டும்தான்.
அவர் பெயர், யோன் ஓலவ் ஃபோஸ்ஸே.
இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர் நோர்வேயைச் சேர்ந்த கவிஞர், உரைநடை மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெறும் நோர்வேயின் நான்காவது குடிமகன் இவர். ஏறக்குறைய தொண்ணூற்று ஐந்து ஆண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்த விருது நோர்வே நாட்டுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
Add Comment