பெப்சி நிறுவனத் தலைவர் இந்திரா நூயி எப்போது பேட்டி கொடுத்தாலும் ஒரு விஷயத்தைத் தவறாது சொல்வார்.அவர் தலைமைப் பொறுப்பை ஏற்று நள்ளிரவில் வீட்டிற்கு வரும் போது அவர் அன்னை அவரைப் பால் வாங்கிவரச் சொன்னதாகவும், நிறுவனத்தலைவராக இருந்தாலும் வீட்டில் ஒரு மனைவி அல்லது மகள்தான் என்று அவர் அம்மா சொன்னதாக. மேலோட்டமாகப் பார்க்கும் போது என்ன ஓர் எளிமை, என்றெல்லாம் பரவசப்படத் தோன்றும். ஆனால் உண்மையில் பார்த்தால், இது அவரின் சில பலவீனங்களைக் காட்டுகிறது. ஒன்று வீட்டின் தினசரித் தேவைகளுக்கான சரியான திட்டமிடல் இல்லை, உறவினரிடையே சரியான கருத்துப் பரிமாற்றம் இல்லை, மூன்றாவதாக வேலைகளைச் சரியாகப் பகிர்ந்து கொடுத்தலும் இல்லை என்பதும் புலனாகும்.
நாளைத் திட்டமிடுவதில் நேர மேலாண்மை மிக முக்கியமானது. இன்று என்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்ற ஓர் உணர்வோடு காலையில் அலுவலகத்திற்குள் நுழைந்திருப்பீர்கள்.. பிறகு உட்கார்ந்து, கணினியைத் தொடக்கிவிட்டு, மின்னஞ்சலைப் பார்த்த உடன் வந்திருந்த மின்னஞ்சல்கள் எதிர்பார்க்காத பிரச்சினைகள் எனப் பதில் அனுப்பிக் கொண்டிருப்பீர்கள். அந்த வேலை முடிந்தபின். மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, கணினி மற்றும் தொலைபேசி மூலம் வந்திருந்த அனைத்தையும் முதல்கட்டமாகக் கையாண்ட பிறகு திரும்பிப் பார்த்தால் அரை நாள் ஓடிவிட்டிருக்கும். இப்போது என்ன செய்ய நினைத்தீர்கள், எதை முடிக்க வேண்டும் என நினைத்தீர்களோ அது மறந்தே போயிருக்கும்.. முன்னாள் அதிபர் ஒபாமாவானாலும், சராசரி மனிதனானாலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். ஆனால் சிலர் அதைத் திறம்படச் செலவு செய்து இனிமையாகவும் திருப்தியுடனும் கழிக்கிறார்கள்.
Add Comment