அமெரிக்கக் காங்கிரசின் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கக் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அரங்கேற்றுகின்ற நாடகங்கள் நகைப்புடையதாக மாறியிருக்கின்றன. தீவிர வலதுசாரி உறுப்பினர்களின் கோரிக்கைகளும் மிதவாதப் பழமை வாதிகளின் செயலாக்கங்களும் ஒத்துப் போகாமல், இன்னும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தக் குடியரசுக் கட்சி, அதிபர் ரேகனின் ஆட்சிக் காலத்தில் மிகநன்றாகச் செயல்பட்டது.
குடியரசுக் கட்சியின் சிறந்த அதிபராக ரொனால்ட் ரேகன் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது பொருளாதாரக் கொள்கை ரீகனாமிக்ஸ் என அழைக்கப்படும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட பணவீக்கத்தை (stagflagging) குறைக்கின்ற பொறுப்பேற்று நன்றாகவே ஆட்சி புரிந்தார். வரிகளைக் குறைப்பதிலும், இராணுவத்திற்குக் கூடுதல் நிதியை ஒதுக்கி ரஷ்யாவை எதிர்ப்பதிலும் ஆர்வம் காட்டினார். பெர்லின் சுவரை வீழ்த்துவோம் என்று சூளுரைத்த இவர் உரை புகழ் வாய்ந்தது. பதவிக்காலம் முடிந்த பின் தன்னை பழமைவாத குடியரசுக் கட்சி உறுப்பினராகச் சித்தரித்துக்கொண்டார்.
அவருக்குப் பின் வந்த ஜார்ஜ் புஷ், அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையில் சுதந்திர மனப்போக்கைக் கொண்டுவந்தார். இது பின்னாளில் அதிபர் கிளிண்டன் NAFTA ஒப்பந்தத்தைக் கொண்டுவர உதவியது. ஆனால், ரோஸ் பீரொ (Rose perot) என்ற அரசியல் தலைவர் இதைக் கடுமையாக எதிர்த்தார். இதுபோன்ற சுதந்திர போக்கு அமெரிக்காவின் வேலைகளை மெக்சிகோவிற்கு வழங்கிவிடும் என நம்பினார். அடுத்து வந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ரோஸ் பெரோட், அதிபர் புஷ்ஷிற்கு வந்த வாக்குகளில் கணிசமான அளவு சிதற வழி வகுத்தார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் கிளின்டன் அதிபராக வெற்றி பெற்றார்.
Add Comment