இஸ்ரேல், பாலஸ்தீன் போருக்கு இன்றைக்கு ஏறத்தாழ 4000 வயது. ஆயினும் வருடாவருடம், புதிய புதிய அவதாரங்களோடு, புதுப்புது அர்த்தங்களோடு, புத்தம்புதிய வடிவங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன அதன் போர் அத்தியாயங்கள். சமீப காலங்களில் இந்தப் போரில் வெகுவாக வளர்ந்துவிட்ட தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் கூடவே சேர்ந்துகொண்டு, வரலாற்றில் எங்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ளேன் என்று தாவி ஏறிக்கொண்டன. இந்தப்போர் மட்டுமில்லாமல், எப்படி எல்லா நாடுகளும் போர்க்காலங்களில் நுட்பத்தை தங்கள் வசம் வளைக்கக் காத்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
சமீபத்திய பதட்டமான சூழலில் (2023 அக்டோபர்), இஸ்ரேல் பாலஸ்தீன் ஆகிய இரு தரப்பினருமே தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஆயுதங்கள், அதிநவீனத் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை தத்தமது போர்த் தளவாடங்களில், யுத்திகளில் பயன்படுத்தியுள்ளனர். தொழில்நுட்பத்தின் இந்தப் பயன்பாடு போரின் சூத்திரத்தையே மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து பெருகியிருக்கும் பகுதிகளில் இத்தகைய சக்தி வாய்ந்த கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான நெறிமுறைக் கவலைகளையும் எழுப்பியுள்ளது.
Add Comment