கை நசுங்கி கால் உடைந்த நிலையில் இடிபாடுகளுக்கிடையில் இருந்த ரணீம் ஹிஜாஜி எட்டு மாதக் கருவைத் தன் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ரணீமுடன் வசித்த அவர் குடும்பத்தினர் ஏழு பேர் இறந்துவிட்டனர். கட்டடக் குவியல்களின் உள்ளே சிக்கியிருந்த ரணீமை அவர் கணவர் கண்டுபிடித்தபோது மீட்பது எளிதில்லை என்பது புரிந்தது. தான் பிழைத்து, இன்னொரு உயிரை இங்கே கொண்டு வந்து அந்தக் குழந்தை படப்போகும் இன்னல்களை எண்ணியோ என்னவோ தன்னை மீட்கும் முயற்சியைக் கைவிடுமாறு சொன்னார் ரணீம். கணவரும் உறவினர்களும் சிரமப்பட்டு இடிபாடுகளில் இருந்து அவரை மீட்டு தெற்கு காஸாவின் நஸீர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உள்ளே செல்லக்கூட வழியில்லாமல் நிரம்பி வழிந்தது போரில் அடிபட்டவர்கள் கூட்டம். படுக்கைகள் இல்லை. மின்சாரம் இல்லை. போதிய அளவு மருத்துவர்களும் மருந்தும் உபகரணங்களும் இல்லை. மருத்துவர் முஹமத் க்வான்டில் அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்ற முனைந்தபோது ஏற்கெனவே கை முழுக்க இருந்த இரத்தத்தைக் கழுவத் தண்ணீர்கூட இல்லை. குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவரால் ரணீமின் உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.
Add Comment