75. இந்தியா லீக் எதிர்ப்பு
விடாது கறுப்பு என்பது போல ஃப்ரான்க் ஓபர்டார்ஃப் சாந்தினிகேதனில் தொடங்கி, ஐரோப்பாவில் அவ்வப்போது தலையைக் காட்டி, இப்போது லண்டனில் வந்து தனது ஒரு தலைக்காதலை மறுபடியும் மொழிந்தார். ஆனால் அன்றும், இன்றும் இந்திரா இந்த ஓபர்டார்ஃப் விஷயத்தில் ரொம்பவே தெளிவாக இருந்தார்.
ஓபர்டார்ஃப் மீது என்றைக்குமே இந்திராவுக்கு காதல், கத்தரிக்காய் எதுவும் கிடையாது. இதை சாந்தினிகேதனில் இருந்த காலத்தில் இருந்தே அவரிடம் மிகவும் தெளிவாக சொல்லிவிட்டார். ஆனாலும், ஓபர்டார்ஃப் அதனை ஏற்றுக் கொண்டு, விட்டு விலகிச்செல்லாமல், தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்தார்.
இப்போது, ஃபெரோஸ் காந்தியும், இந்திராவும் காதலர்கள் என்பது அவருக்குத் தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. ஆனாலும், அவர் கல்யாணப் பேச்சை நிறுத்துவதாக இல்லை என்பது இந்திராவுக்கு சங்கடமாகத்தன இருந்தது.
ஆனாலும், ‘நமக்குள்ளே திருமணம் என்பதெல்லாம் நடக்காத கதை! எனது குடும்பத்தினர் அதற்கு ஒப்புதல் தரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல அதற்குக் காரணம்! எனக்கே அதில் இஷ்டமில்லை! எனவே, இது பற்றி இனிமேல் நாம் பேசிப் பிரயோஜனமில்லை!” என்று சொல்லிவிட்டார்.
அம்மாவின் மறைவுக்கு சுமாராக ஓராண்டு கழித்து இந்தியா வந்த இந்திரா, தன் அம்மா குறித்த ஏராளமான நினைவுகளை தன் அப்பாவுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தார். அம்மாவை இழந்த சூழலில், அப்பாதான் தனக்கு இருக்கும் ஒரே ஆதரவு என நம்பினார்.
Add Comment