76. இந்திராவுக்கு சிகிச்சை
1938 ஜனவரியில் டோலம்மா என்று இந்திராவால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்வரூபராணி உடல்நலக் குறைவால் மறைந்தார். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆனந்த பவனிலேயே வசித்த ஸ்வரூப ராணியின் சகோதரியும் மரணமடைந்தார்.
இந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் நேரு, “நம் குடும்பத்தின் ஒரு தலைமுறை முழுமையாக மறைந்துவிட்டது; இப்போது நம் குடும்பத்து மூத்த உறுப்பினர் கிரீடம் என் தலையில்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
1937-38 காலகட்டத்தில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஒருவிதச் சுணக்கம் ஏற்பட்டது. நேருவும், இன்னும்சில தலைவர்களும் நவீன சிந்தனையாளர்கள் என்று கருதப்பட்டாலும், ராஜாஜி, வல்லபாய் படேல் ஆகிய இருவரது பழமைவாதப் பாதையை ஒரு பிரிவினர் ஆதரித்தனர். முஸ்லிம்லீக் தலைவரான ஜின்னா, காங்கிரசுடன் முழுமையாக ஒத்துப் போகவில்லை.
“இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது இந்தியர்கள் நேரடியாகப் பங்கேற்று, சாதிக்கிற விஷயமில்லை; அது உலகச் சூழ்நிலையைச் சார்ந்தது” என்பதை நேருவும் புரிந்துகொண்டார்.
Add Comment