ஹிட்லர், யூதர்கள் மீது நிகழ்த்திய கொடூரங்கள் ஈடிணை சொல்ல முடியாதவை என்ற நிலையை யூதர்கள் மாற்றியெழுதக்கூடும். இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையில் புதிய உச்சங்களைத் தொடுகிறது. மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், பள்ளிகள், அகதி முகாம்கள் என எந்த வரையறையும் இன்றிக் குண்டுகள் வந்து விழுகின்றன. பாதுகாப்பான இடம் என்று மொத்த காஸாவில் ஒரு சதுர அடிகூட இல்லை. சிதறி விழும் பாஸ்பரஸ் வெடிகுண்டைப் போல குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொரு மூலையில் கிடக்கிறார்கள். குழந்தைகள் இறந்தார்களா இருக்கிறார்களா என்றுகூடத் தெரியாமல் தவிக்கும் நிலை. தங்கள் பிள்ளைகளை அடையாளம் காண அவர்கள் கைகளில் பலவண்ணக் கயிறுகளை பிரேஸ்லட் போலக் கட்டி வைக்கிறார்கள் பாலஸ்தீனியர்கள். சிலர் மார்க்கர் கொண்டு உடலில் பெயரையும் அடையாள எண்ணையும் எழுதி வைக்கிறார்கள். இந்த அவல நிலையில்தான் காஸா இன்று இருக்கிறது.
இன்னமும்கூட அமெரிக்கா அதிபர் பைடன் பாலஸ்தீன் இறப்பு எண்ணிக்கையை நம்பத் தயாராக இல்லை. ஐநா நடவடிக்கைகளைத் தடுப்பது, பணம், ஆயுத உதவி, தார்மீக ஆதரவு அனைத்தும் வலுவாகத் தொடர்கிறது. ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை விடுதலை செய்யும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார் இஸரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. ஐநா தீர்மானங்களை நிறைவேற்றி வாக்கெடுப்பு நடத்துவதும் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதும் தவிர வேறெதுவும் செய்யவில்லை.
Add Comment