‘தீபஒளித் திருநாள்’ என்கிற தீபாவளிப் பண்டிகை உலகெங்கும் ஜாதி இன பேதமின்றிக் கொண்டாடப்பட்டாலும் தமிழர்களின் தீபாவளி மிகவே விசேடமானது. தீபாவளிக் கொண்டாட்டங்களின் பட்டியலில் இனிப்புகள், பட்டாசுகள், புதிய திரைப்பட வெளியீடுகள் ஆகியவற்றினும் மேலானதாக ஒருகாலத்தில் கோலோச்சியவை பிரபலப் பத்திரிகைகள் வெளியிடும் தீபாவளி மலர்கள். பின்னாளில் இவை மதிப்பிழந்து போயின. இன்றும் தீபாவளி மலர்கள் வெளிவருகின்றனதான் என்றாலும் பழையவற்றின் சிறப்பம்சங்கள் எதுவும் அவற்றில் இல்லை என்பதே பொதுவான வாசகர்களின் குற்றச்சாட்டு. ஏன் இந்த நிலை என்பதை அறிவதற்கு முன்பாக, அந்நாளைய தீபாவளி மலர்கள் எப்படியிருந்தன என்பதைப் பார்த்து விடலாம்.
ஆதிமுதலான தீபாவளி மலர் எது என்பதை ஆராயப் புகுந்தால் அதற்குத் தெளிவான தரவுகள் எங்கும் கிடைக்காது. நினைவுக்கெட்டியவரை 1934ல் ஆனந்தவிகடன் வெளியிட்ட தீபாவளி மலர்தான் முதலாவது என்றே குறிப்பிட வேண்டியுள்ளது. தலைதீபாவளி மாப்பிள்ளையை கங்கா ஸ்னானம் செய்விக்க ஆயத்தமாகும் வண்ண முகப்புப் படத்துடன் வெளிவந்தது. அதன்பின் 70கள் வரையில் தனித்துவத்துடன் கோலோச்சிய விகடனின் தீபாவளி மலர் 1972 இதழுடன் நிறுத்தப்பட்டது. பின்னர் இரண்டாயிரத்திற்குப் பிறகு தொடங்கி இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது.
Add Comment