குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால் அதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இங்கே உள்ள பிரச்னை என்னவென்றால் தனியொருவர் அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டுப் படிப்படியாய் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து தம் குடும்ப விருட்சத்தைக் காலூன்றச் செய்து எழுபது தலைமுறைக்கும் தேவையான அசையும், அசையாத சொத்துக்களை வாங்கிக் குவிப்பதுதான். தொட்டுக் கொள்ள மதமும் இனமும் குலமும் கோத்திரமும் இருக்கிறது அல்லவா..? இனி என்ன… கேட்கவா வேண்டும்..?
தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய மனசாட்சியை மொத்தமாய்த் தொலைத்து, வெள்ளந்தியான மக்களை ஏமாற்றிப் பிழைக்க இலங்கையில் கோலோச்சிய எந்தவொரு அரசியல் குடும்பமும் தயங்கியதே இல்லை. இப்படி மக்கள் மேல் தலைமுறை தலைமுறையாய்த் தொடரும் ஆதிக்கத்தைத்தான் குடும்ப ஆட்சி என்கிறோம். இன்று குடும்ப ஆட்சி என்று யாருடனாவது பேசிவிட்டு ஃபேஸ்புக்கைத் திறந்தால் மகிந்த ராஜபக்சேவின் திருவுருவப் படத்தைக் காட்டுமளவுக்கு அல்கோரிதம் அபாரமாய் ஒத்துழைக்கிறது.
Add Comment