77. காந்திஜியின் சம்மதம்
காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் நபரான வினோபா பாவேவை கைது செய்து, அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. அடுத்து நவம்பர் 7-ஆம் தேதி தான் சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால், கோரக்பூரில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நேருவின் பேச்சை காரணம் காட்டி, அக்டோபர் 31-ஆம் தேதியே அவர் கைது செய்யப்பட்டார்.
கோரக்பூர் சிறை வளாகத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, நேரு அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்தார். நவம்பர் 3-ஆம் தேதி நீதிபதி மோஸ், நேருவுக்கு நான்கு வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தார். நேருவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அறிந்து பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலே அதிர்ச்சி அடைந்தாராம். உடனே, இந்திய வைஸ்ராய்க்கு, “நேருவை, வழக்கமான கிரிமினல் குற்றவாளி போல நடத்தக் கூடாது; அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடுங்காவல் தண்டனை மாற்றப்படவேண்டும்” என்று கருத்துத் தெரிவித்தார்.
நேருவின் தண்டனை பற்றி அறிந்ததும், ஸ்விட்சர்லாந்தில் சிகிச்சை பெற்றுவந்த இந்திரா பெரும் வேதனை அடைந்தார். “என் மனசு பூராவும் இந்தியாவில்தான் உள்ளது. இந்தியா திரும்புவதற்குத் தேவையான பணம் என்னிடம் உள்ளது.” என்று நேருவுக்குத் தந்தி அனுப்பினார். “எனது சிறைத் தண்டனை பற்றிக் கவலைப்படாதே!” என்று பதில் தந்தி அனுப்பினார் நேரு.
Add Comment