வ.சு.ப.மாணிக்கம் ( 17.04.1917 – 25.04.1989)
எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பெருஞ்சுடர் அவர். சங்கத் தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களின் ஆழ அகலங்களை ஆய்ந்து முத்துக்களை எடுத்தவர். செட்டிநாட்டுப் பண்டிதமணியின் பெயர்சொன்ன சீடர். பள்ளியோ கல்லூரியோ செல்லவே அல்லாது தமது ஊக்கத்தாலும், முயற்சியாலும் கற்றச்சிறந்த பெருந்தமிழறிஞர். ஏழிளந்தமிழைப் பயிற்றுவித்ததோடு, அவற்றின்படி வாழ்ந்தும் காட்டியவர். ஒரு ஆசிரியராக பல்லாயிரம் மாணவர்கள் போற்றுதலைப் பெற்ற பெருமகன். தமிழுக்காகத் தெருவில் இறங்கிப் போராடவும் தயங்காத அவரது முயற்சியால்தான் தில்லைக் கோயிலில் திருமுறை முழக்கம் பிறந்தது. ஆறு வயதில் பெற்றெடுத்த பெற்றோர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்க கேடூழ் சூழ்ந்த வாழ்விலும் தனது கடின உழைப்பு ஊக்கம், விடாமுயற்சி, தாய்வழிப் பாட்டனார்களின் ஆதரவு இவற்றால் வாழ்விலும் தமிழிலும் ஏற்றம் பெற்றவர்.
இளந்தையாயிருந்த காலத்திலேயே பொய் சொல்லச் சொன்ன முதலாளியின் விருப்பத்தை, ஆணையை மறுதளித்து அதற்குப் பதிலாகத் தனது வேலையை இழந்த நேர்மைத்திறம் கொண்டிருந்தவர். மதுரைக் காமராசர் பல்கலையின் துணைவேந்தராகப் பணியில் அமர்ந்த போது, தமிழறிஞர்கள் பலரைத் தமிழாராய்ச்சிக்காகப் பல்கலைப் பணியில் அமர்த்தி தமிழாராய்ச்சி செழுமைபெற வழிவகை செய்தவர். அண்ணாமலைப் பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை போன்றவற்றில் பேராசிரியராகவும், மதுரைப் பல்கலையின் துணைவேந்தராகவும் சிறப்புறப் பணியாற்றியவர். செட்டிநாட்டுப் பகுதி எனப்படும் பறம்புமலையைச் சுற்றியுள்ள பகுதி தந்த, தமிழ்த்தாயின் தலைமகன்களில் முதல்வரான வ.சு.ப.மாணிக்கனார் அவர்களே இந்தவார உயிருக்கு நேர் பகுதி 51’ன் நாயகர்.
Add Comment