மகிந்த ராஜபக்சேவின் அண்ணன் தம்பிகளின் பெயர் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால் சின்னப் பிள்ளையும் சொல்லும்’ என்ற லெவலுக்கு வந்தது என்னவோ 2005ம் ஆண்டிற்குப் பிறகுதான். அதாவது சகல சம்பத்துக்களும் பெற்ற ஜனாதிபதியாய் மகிந்த ராஜபக்சே முடிசூடியதற்குப் பிறகுதான் விதவிதமான பதவிகளோடு அவர்கள் இலங்கையின் மீட்பர்களாக மீடியா புண்ணியத்தில் தோன்றிப் புகழ் பெற்றார்கள். மகிந்த ராஜபக்சே தவிர ஏனைய ராஜபக்சேக்கள் வானலோகத்தில் இருந்து திடீரென்று அரசியலுக்குத் தருவிக்கப்பட்ட கும்பல் என்றொரு பொது அபிப்பிராயம் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒரு கூட்டுக் கிளியாக ,ஒரு தோப்புக் குயிலாக 1970ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போதே அறிமுகமாகிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
ஐரோப்பாவெங்கும் யூதர்கள் அடித்து விரட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிர்ஷ்டவசமாய் யாராவது ஒரு யூதருக்கு எங்கேயாவது ஒரு தொழில் துறையில் சின்னதொரு வாய்ப்புக் கிட்டினாலும் தவறவிடாமல் பற்றிக் கொண்டு முழு சமூகத்திற்கும் அதன் பலாபலன்களை வழங்குவது போலத்தான் ராஜபக்சே குடும்பமும். கால ஓட்டத்தில் யாராவது ஒரு ராஜபக்சேவின் ஜாதகம் அமோகமாய் இருக்கும் போது ஏனைய ராஜபக்சேக்கள் எல்லாம் அவர் தயவில் தவழ்ந்து எழுவார்கள். மகிந்த ராஜபக்சே அபேட்சகர் என்று அறிவிக்கப்பட்டதுதான் தாமதம். முழுக் குடும்பமும் ராட்டினமாய் சுற்றிச் சுழன்றது. தொகுதியில் தம் தந்தையின் வெற்றிடத்தை தம் குடும்ப அங்கத்தவர் ஒருவராலேயே நிரப்புவதற்கு இத்தேர்தலை விட்டால் வேறு மார்க்கமில்லை என்பது அவர்களுக்குப் புரிந்து இருந்தது.
Add Comment