6. வல்லரசுப் பயணத்தில் சோவியத்
“பணியிடங்கள் மிகவும் கொடியவை. – 40 டிகிரி பாரன்ஹீட்டிலும் வேலை செய்ய வேண்டும். அதற்குக் கீழே வெப்பநிலை சரிந்தால் மட்டுமே முகாம்களுக்கு திரும்ப முடியும். உணவும் 1400 கலோரிகள் என அளந்து கொடுக்கப்படும். சிறைக்குள் உழைப்பில்லாமல் இருக்கும் ஒருவருக்கே இது பற்றாக்குறைதான். எங்களுக்கு எங்கிருந்து பற்றியிருக்கும்? இடுப்பளவு பனியில் நின்றுகொண்டு காட்டு மரங்களை வெட்ட வேண்டும். அவை சரிந்து விழும்போது, சட்டென விலகித் தப்பிக்க முடியாதளவு கால்கள் பனியில் மாட்டியிருக்கும். இதிலும் இறந்தவர்கள் பலர். வெயில் காலத்தில், எங்கள் வேலைநேரம் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம். முட்டியளவு சேற்றிலோ, தண்ணீரிலோ குழிக்குள் நிற்பது எங்களை நோய்வாய்ப்படுத்தியது. நிமோனியா, காசநோய், மலேரியா, குளிர் காய்ச்சல் என்று பலவிதமான நோய்களுக்கும் பலியானோம்.” கூலாக்கிலிருந்து தப்பித்த ஒரு கைதியின் வாக்குமூலம் இது.
கூலாக் என்பவை சோவியத்தின் கட்டாயத் தொழில்துறை முகாம்கள். நரகத்திற்கு இணையான இவற்றில், கிட்டத்தட்ட பதினெட்டு மில்லியன் மக்கள் அடைக்கப்பட்டு இருந்தார்கள். நிலங்களை இழந்தபின், துரத்தப்பட்ட விவசாயிகள்; ஆட்சியை எதிர்த்தவர்கள்; எந்த வஞ்சமும் இல்லாமலும் பலர் இதிலிருந்தனர். கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் அடிமைகள் போல அடைந்திருந்தனர். உரேனியத்திலிருந்து அணுகுண்டு, அணு உலை தயாரிப்புகள் போன்றவையும் இதிலடங்கும். கூலிவேலை செய்பவர்கள் மட்டுமல்ல… விஞ்ஞானிகள், பொறியாளர்கள் உட்படப் பலரும் இந்த கூலாக்குகளில் இருந்தனர்.
Add Comment