ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச் சிதறவிடாமல் கருமமே கண்ணாயிருந்ததையும் அவசியம் தரிசித்தேயாக வேண்டும்.
அக்டோபர் இருபதில் ஆரம்பமான இந்திய-சீன எல்லைப் போர், சமாதான உடன்படிக்கையுடன் நிறைவுக்கு வந்தது. ஆனால் அந்தப் போர் கொண்டு வந்த அழிவோ, அளவிட முடியாதது. உயிர்ப்பலிகளும், உடைமை இழப்புக்களும் மளமளவென்று கூடிச் சென்றன. பசியும் பஞ்சமும் சிறப்புப் பரிசாகக் கிடைத்தன. பிரதமர் நேருவுக்கு ஆறுதல் சொல்லி முடிப்பதே, அணு விஞ்ஞானி ஹோமி பாபாவிற்கும், விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாய்க்கும் பெரும் வேலையாகிவிட்டது.
விக்ரம் சேர்த்திருந்த புதிய அறிவியலாளர்கள் குழுவோ பொறுமையுடன் காத்திருந்தது. உண்மையில் சொல்லப் போனால், ராக்கட் விட வேண்டுமென்ற வேட்கை, முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அவர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டது. ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு, அறிவியல் முன்னேற்றம் ஒன்றே தீர்வு என்பதைக் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டே இருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் கண்முன் காட்டும் சாகசங்களே போதுமே… அவற்றைக் கண்டும் காணாதது போலப் போக முடியாது. நாமும் அறிவியல் யுகத்தை ஆரம்பித்தேயாக வேண்டும்.
Add Comment