மா, பலா, வாழை- இந்த முக்கனிகளைப் பிடிக்காதவர்கள் உலகத்தில் இருக்கவே முடியாது. இம்மூன்று கனிகளும் பிறக்கும்போதே தங்களுக்குள்ளே அதிகபட்சச் சுவையை வைத்துக் கொண்டுதான் அவதரிக்கின்றன. அப்படியே சாப்பிடலாம். ஆனால் ஒரு சுவைஞராகப்பட்டவள் அதன் சுவையை மேலும் மெருகூட்டும் விஷயங்களை ஆராய்ச்சி செய்து கொண்டேதான் இருப்பாள். அப்படி நான் ஆராய்ந்து அறிந்து கொண்ட ருசி ரகசியங்கள் பல.
ஒரு மாம்பழத்தை வாங்கினால் நீங்கள் எப்படிச் சாப்பிடுவீர்கள்..? தோல் சீவி, துண்டு துண்டாக வெட்டிச் சாப்பிடுவீர்கள். அப்படித்தானே.? அதற்குப் பதிலாக நான் சொல்வது போல் ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள். நல்ல பழுத்த மாம்பழமாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்கு கழுவி ஒரு ஐந்து நிமிடம் பரோட்டா மாஸ்டர் பரோட்டா மாவை உருட்டுவது போல நன்றாக உருட்டுங்கள். பழம் நல்ல கொழ கொழப்பாகி விடும். அதன் பிறகு மாம்பழத்தின் ஒரு ஓரத்தில் சிறிய ஓட்டை போடுங்கள். இப்போது அந்தத் துளையை வாயில் வைத்து ஜுஸ் உறிவது போல நன்றாக உறிஞ்சி சாப்பிடுங்கள். மொத்த மாம்பழச் சாறும் அந்த சிறு ஓட்டை வழியாக உங்கள் வாயில் வழுக்கிக்கொண்டு விழும். இப்படிச் சாப்பிடும் போது தான் மாம்பழத்தின் உண்மையான சுவையை முழுவதுமாக உணர முடியும்.
Add Comment