Home » உயிருக்கு நேர் – 52
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 52

குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995)

அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு பொழுதுபோக்கு. அவர் ஒரு ஆதினத் தலைவர். அதுவும் மிக இளைய வயதில் ஆதினத் தலைவராக ஆனவர்களில் அவர் ஒருவர் (24 வயது). ஆதினத் தலைவர்கள் துறவு, மடம், கோயில் என்று சமயப் பணிகளை மட்டும் செய்து இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் சமயப் பணிகளோடு, மாபெரும் மக்கள் திரளுடன் இணைந்து சமூகப் பணியும் செய்தார். அவர் தலைமை வகித்த ஆதின மடம் இருந்த ஊர் ஒரு சிற்றூர்தான். ஆனால் அந்த ஊர் தேசிய அளவில் அவரால் புகழ் பெற்றது. காரணம் அவர் உருவாக்கிச் செயல்படுத்திய மாதிரிக் கிராமச் செயல்திட்டம்; தமது ஆக்கப்பூர்வமான பணிகள் மூலம் கிராமத்தின் அனைத்து சமூகத்தினரின் பங்களிப்பையும் ஒன்றிணைத்து அந்த மாதிரித் திட்டத்தை அவர் உருவாக்கினார். பெண்கள் அதில் முக்கியப் பங்கு வகித்தார்கள். கல்வி நிலையங்கள், சமூக, விவசாய, தொழிப் பணிகளுக்கேற்ற எளிமையான ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றைத் தனது மடத்தின் வட்டாரங்களில் அந்த மாதிரித் திட்டத்தின் வழி ஏற்படுத்தியவர். அந்த செயல் திட்டத்தின் விளைவால் ஊரே மாற்றம் பெற்றது. அந்த செயல்திட்டத்தின் தாக்கமும் விளைவும் இந்திய ஒன்றிய அரசு வரை சென்று, அதன் பாராட்டைப் பெற்றது.

அதோடு அந்த மாதிரித் திட்டத்துக்கு அவரது மடம் இருந்த ஊரின் பெயரையே வழங்கி, அதனை மற்ற கிராமங்களுக்கும் செயல்படுத்த ஊக்கமளித்தது இந்திய ஒன்றிய அரசு. அந்த அளவுக்குச் சமுதாயப் பணிகளில் ஈடுபாடு காண்பித்த துறவி அவர். அவர் எண்ணியதெல்லாம் பெருஞ்செயல் நோக்கில் இருந்தவை. சிறிதும் களைப்புறாமல் அந்தச் சமூக நோக்கங்களுக்காகத் தனது காலம் முழுதும் விசையுடன் செயல்பட்டவர் அவர். துறவிகளுக்குப் பல்லக்குத் தேவையில்லை என்று பல்லக்கில் பவனி வருகின்ற ஆதினத் தலைவர்களின் வழக்கத்தைத் தனது மடத்தில் உடைத்தவர். மக்களோடு இணைந்து நடந்தவர். திருக்குறள் விழா, பாரிவிழா என்று விழாக்களை எடுத்து திருக்குறளை மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரிதும் கொண்டு செல்லும் பணிகளை ஊக்கமாகச் செய்தவர். சமயவாதிகளைக் கடுமையாக விமரிசித்து வந்த ஈ.வெ.ரா. பெரியார் கூட, இந்தத் துறவியுடன் இணைந்து நின்று பணி செய்த அளவுக்கு சமூக நோக்கு நிரம்பியவர். 52 நூல்களை நேரடி நூல்களாகவும், எண்ணற்ற அளவில் பேச்சுகளையும், கட்டுரைகளையும் அளித்தவர். அவரது ஆக்கங்களின் நூல்வரிசை 16 தொகுதிகளில் 6000 பக்கங்களை விஞ்சி நிற்பது. பேச்சு, எழுத்து, கலை. சமூகப் பணி, திருக்குறள் பேரவை என்று பல தளங்களின் குன்றா விசையுடன் செயலாற்றியர். அவரது ஊரைச் சொன்னால் போதும், பெயரைச் சொல்ல வேண்டாம் என்ற அளவில் புகழ்பெற்ற தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களே இந்த உயிருக்கு நேர் தொடரின் இந்த 52’ஆவது மற்றும் இறுதி வாரப் பகுதியின் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!