78. டும்..டும்..டும்
இந்திரா சேவாகிராம் சென்று காந்தியைச் சந்தித்தபோது, அவர் ஃபெரோஸ் – இந்திரா திருமணம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் இந்திரா பொறுமையாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பதிலளித்துக் கொண்டே வந்தார்.
காந்திஜி “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபின் பிரம்மசரியம் கடைபிடிக்க வேண்டும்” என்று சொன்னபோது இந்திரா துணுக்குற்றார். சட்டென்று அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இரண்டு பேர் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று நீங்கள் தடுக்கலாம். ஆனால், திருமணமான இருவரிடம், ‘நீங்கள் பிரம்மசரியம் கடைபிடிக்க வேண்டும்’ என்று சொல்வது முட்டாள்தனம். காரணம் அந்த முடிவு தம்பதியரிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும்; சந்தோஷத்தைக் கெடுக்கும்!” என்று பதில் சொன்னார்.
அடுத்து, பேச்சின் திசையை மாற்ற இந்திரா “நாங்கள் ஆடம்பரத்தை வெறுக்கிறோம். மிகவும் எளிமையான முறையில் எங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார். ஆனால் எளிமைக்குப் பெயர்பெற்ற காந்திஜி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
Add Comment