நெடுஞ்சாலைகள் நாம் பிரயாணம் செய்வதற்கு மட்டும் உருவாக்கப்படுபவை அல்ல… பல்வேறு மாநிலங்களை இணைத்தல், போக்குவரத்து நேரத்தினைக் குறைத்தல், ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றொரு மாநிலத்திற்கு சந்தைப்படுத்தக் கொண்டு செல்லுதல், துறைமுகங்களைச் சீக்கிரம் சென்றடைதல் போன்ற பல்வேறு நோக்கங்களை பின்ணனியாகக் கொண்டே நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த வகையில் நெடுஞ்சாலைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. மனித உடலுக்கு இரத்தநாளங்கள்போல, நாட்டிற்கு இன்றியமையாதது நெடுஞ்சாலைகள். இவைகளை அமைப்பது, ஒருங்கிணைப்பது, பராமரிப்பது ஆகியவை அரசின் கடமை.
ஆனால், இந்த நெடுஞ்சாலைகள் எல்லாவற்றையும் அரசே அமைத்து, பராமரிப்பது இயலாதது என்பதால் நெடுஞ்சாலைகள் அமையும் விதம், அவைகளின் தூரம், வாகனங்களின் உபயோகம், இன்னப்பிற தேவைகளை அனுசரித்து நாட்டின் பல இடங்களில் நெடுஞ்சாலைகளைத் தனியார் நிறுவனங்கள் அமைத்துக் கொடுக்க அரசு அனுமதி அளிக்கிறது. அதாவது நெடுஞ்சாலை அமைக்க தேவையான நிலத்தினை அரசு கையகப்படுத்திக் கொடுக்கும். அதன்பின்பு அதில் Build,Operate and Transfer ( BOT) முறையிலும் மற்றும் Operation Maintenance and Transfer (OMT) முறையிலும் தனியார் நிறுவனங்கள் சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அதனை ஒப்படைக்கும். சாலைகள் அமைக்க ஆன செலவு, அவற்றைப் பராமரிக்க ஆகும் செலவு இவைகளுக்காக அந்த நெடுஞ்சாலைகளில் வந்து,போகும் வாகன ஓட்டிகளிடம் குறிப்பிட்ட தொகை அந்தந்த தனியார் நிறுவனங்களால் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது சுங்கவரி (tollfees) எனவும், இவைகளை வசூலிக்கும் இடம் சுங்கச் சாவடிகள் (tollgates) எனவும் அழைக்கப்படுகின்றன.
Add Comment