ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை ஆனார்கள். ஹமாஸிடம் மீதம் இருக்கும் 140 பணயக் கைதிகள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் ஆண்கள். ஒருவார இடைவெளிக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கிய தாங்குதல் முன்பைவிட மூர்க்கமாக இருந்ததாக காஸா மக்கள் ராய்டர்ஸ் செய்தித் தொடர்பாளரிடம் குறிப்பிட்டார்கள்.
கான் யூனுஸ் பகுதியில் முதல் நாளில் மட்டும் 400 ஹமாஸ் பயங்கரவாத இடங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. அன்று மட்டும், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200. காஸாவின் ஐந்து பகுதிகளில் வடக்கு காஸாவில் ஆரம்பித்து கான் யூனுஸ் வரை ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாகி எகிப்தை ஒட்டியிருக்கும் ராஃபாவை நோக்கி மொத்தக் கூட்டமும் நகர்த்தப்பட்டது. ராணுவம் உள்ளே வந்துவிட்டதால் தரைவழித் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஜெருசலேம் நகரில் ஹமாஸ் படையைச் சேர்ந்த இருவர் காரிலிருந்து இறங்கி பேருந்துக்குக் காத்திருந்த மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில் ஹமாஸ் இயக்கத்தினர் அங்கேயே உயிரிழந்தனர். யூத சிவிலியன் ஒருவர் பாதுகாப்புப் படைக்கு உதவியாக சுட்டுக் கொண்டிருந்ததை தவறாகப் புரிந்து கொண்டதால் அவரும் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Add Comment