ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய் செய்வதுதானே அது. ஆனால் ஜே.ஆர். என்பது அரசியல் காடைத்தனத்தின் ஊற்றுக் கண். வெல்லும் வரை ஓட்டு எண்ணும் தொழினுட்பம், ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் ஒட்டுமொத்தக் கெபினட் அமைச்சர்களையும் இறக்கி எதிர்க்கட்சிக்காரர்களையும் பேட்டையையும் பயப்பிராந்தியத்தில் ஆழ்த்தி எந்தவழியிலோ வென்று கொள்ளும் தொழினுட்பம் எல்லாம் இத்தேசத்திற்கு அவர் அறிமுகப்படுத்தியவைதான்.
லிபரல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனுடன் அபரிதமாய் நட்பைப் பேணிக் கொண்டது எல்லாமே ஜே.ஆரின் அப்போதைய அரசியல் தேர்வுதான். அவருக்குக் கம்யூனிஸம் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். ஆகவே, அவர் அமெரிக்கா – மேற்கின் ஆஸ்தான செல்லப்பிள்ளையாகிக் கொண்டார். உலகப் பொதுவிவகாரங்களில் அமெரிக்கா என்ற தலைவனுக்குக் கட்டுப்பட்ட பொம்மை வரிசைகள் போலத் திகழ்ந்து கொண்டு எத்தனைதான் ஜால்ரா அடித்தாலும் மேற்கு நாடுகள் தங்கள் நாட்டிற்குள் கட்டற்ற ஜனநாயகப் பண்புகளைப் பேணுகின்றன. அங்கே சாஸ்திரக்காரர்களும், ஜோதிடர்களும் சொல்லும் தேதியில் ஆட்சியாளர்கள் தம்மிஷ்டத்திற்குத் தேர்தல்கள் எதுவும் வைப்பதில்லை. அரசியல் சாசனம்தான் அங்கே எல்லாமே. ஆனால் ஜே.ஆரோ தனக்குப் பட்டதை எல்லாம் செய்தார். 1978-ல் அவர் அறிமுகப்படுத்திய அரசியல் சாசனம் அடுத்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு சுயநலத் தேவைக்காகவும் திருத்தப்பட்டுக் கொண்டே இருந்தது.
Add Comment