சென்னை புத்தகத்திருவிழா, முதல் புத்தக வெளியீடு என்று ஜனவரி 2023 கொண்டாட்டம் முடிந்தது. பொறுப்பான எழுத்தாளராக இரண்டாவது புத்தகத்திற்குத் திட்டமிட்டேன். புத்தக ஆராய்ச்சி ஒருபுறம், அது சார்ந்த இடங்களைத் தேடிச்சென்று பெற்ற நேரடிஅனுபவம் மறுபுறம் என்று வேகமாக புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். பன்னிரண்டாயிரம் வார்த்தைகளில் புத்தகம் நின்றது. என்ன செய்தாலும் மேற்கொண்டு எழுதமுடியாமல் முட்டிக்கொண்டு நின்றேன். அது மிகப்பெரிய மனஉளைச்சலானது.
அதிலிருந்து மீள்வதற்காக ஏகப்பட்ட வேலைகள் செய்துபார்த்தேன். வாரம் தவறாமல் எழுதும் மெட்ராஸ் பேப்பர் கட்டுரைகளை ஒன்றிற்கு இரண்டாக மாற்றினேன். அப்போதும் அது தனியாக ஒரு ராகத்தை இசைத்துக் கொண்டிருந்தது. அப்படி எனில் மூளையை இன்னும் பிசியாக வைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்? என யோசித்து தினசரி கட்டாயம் எழுத அமர்ந்தேன். எதையாவது எழுதுவது என்பது எல்லா நாளும் தோன்றாது. எனவே தொடர்போல் தொடர்ந்து எழுதும் கட்டாயத்தை ஏற்படுத்திக்கொண்டேன். ஃபேஸ்புக்கில் சந்தித்த ஒவ்வொரு நபரைப்பற்றியும் தினசரி எழுத ஆரம்பித்தேன். நாள்விடாமல் வெற்றிகரமாக ஐம்பதாவது நாள் நெருங்கியபோது மீண்டும் அந்தப் புத்தகம் நின்றது நினைவிற்கு வந்தது.
Add Comment