2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022-ஆம் ஆண்டு தளிர், சூஃபி ஆகும் கலை வெளியீடு முடிந்த கையோடு அடுத்த ஆண்டுக்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டேன் என்றால் நம்புவீர்களா..?
2023-ஆம் ஆண்டுக்காக நான் போட்ட திட்டமிடல் பல பக்கங்களைக் கொண்டது. நிறைவேறியது பாதிப் பக்கங்கள் மட்டுமே. ஒரு நாள், ஆரம்பிக்கும் கணம் முதல் தூங்கத் தொடங்கும் கணம் வரை முக்கியமான எல்லாம், அட்டவணையில் இருக்கும். முக்கியமானது என்றால் குடும்பம் உள்பட. எழுத்துக்கு அப்பாற்பட்ட அனைத்து முக்கியங்களும் உள்ளடங்கிய பட்டியல் அது.
அவ்வப்போது அம்மா அப்பா வருகை, உறவுகள் திடீர் விசிட், நண்பர்கள், பண்டிகை எல்லாம் நடக்கும். அந்த நாள்களில் கூட எழுத்துக்கு ஆகாது என்று தள்ளி வைத்ததில்லை. அப்போது மிகமிகக் குறைவாக எழுத்து வேலை இருக்கும். வார இறுதி நாள்களில் ஆரம்பிக்கும் மெட்ராஸ் பேப்பர் வேலைகள் செவ்வாய் வரை செல்லும். அப்படிப் பார்த்தால் 365 நாளும் எழுத்தோடு வாழ்ந்தேன் என்று துணிந்து சொல்வேன்.
Add Comment