இந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் சாதனையாகத் தெரிவது எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் என் காலை எடுத்து வைத்திருப்பதுதான். என் வீட்டைப் பார்க்கத்தான் கண்றாவியாக இருக்கிறது. கிடக்கிறது கழுதை. இந்த மல்ட்டி டாஸ்கிங் எல்லாம் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை.
வீடு என்பது சுவரும் சுத்தமும் அல்ல. குடும்ப உறுப்பினர்கள்தான். நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கும் தம்பதிகள் என்பதால் என் கணவரால் எப்போதுமே சிக்கலில்லை. என் உதவி தேவைப்படாத, சரியாகச் சொல்வதென்றால் என் விஷயத்தில் நீ தலையிடாதே என்று சொல்லக்கூடிய வயதில் இருக்கும் மகள்கள். எழுத்தால் எழுந்த புதிய இடைவெளி நான் அஞ்சியது போலில்லை. ஒருவருக்கொருவர் உதவி, வளர்ப்பும் வளர்ந்ததும் நன்றே என்பதை உறுதி செய்தன.
Add Comment