11 – ஆட்சியும் அமைதியும்
இன்னொரு தலைவர் கையில் சோவியத் எனும் கரும்பலகை சென்றது. ஆச்சரியமாக, இதில் குறைவாகவே அழித்தல்கள், திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆரம்பம் மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது.
குருஷவிற்கு கட்டாய ஓய்வு அளித்தது வேறு யாருமில்லை… அரசியலில் அவர் வளர்த்துவிட்டிருந்த ப்ரியெஸ்னிவ் லியனிட். துணை அதிபராக இருந்தவர், அதிபரைக் கட்டாயமாக ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு பதவிக்கு வந்தார். அவரும் ஓய்வுக்காலத்தில், ‘குருஷவின் நினைவுகள்’ என்ற வாழ்க்கைக் குறிப்பை எழுதி, அமெரிக்காவிற்கு அனுப்பி வெளியிடச் செய்தார்.
ப்ரியெஸ்னிவ் லியனிட் (1964-1982) உக்ரைனின் கைமென்ஸ்க் நகரில் 1906-ஆம் ஆண்டு பிறந்தவர். பதினைந்தாம் வயது முதலே, தந்தையுடன் எஃகு ஆலையில் உழைக்கத் தொடங்கியவர். பிறகு தொழிற்கல்வி கற்று, நில அளவையராகப் பணிபுரிந்தார். கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தபின், மேற்படிப்பு மூலம் உலோகவியல் பொறியாளரானார். கட்சியிலும் வளர்ந்தார். குருஷவின் கனவான ‘கன்னி நிலங்கள்’ திட்டத்தை முழுமூச்சாக நிறைவேற்றினார். இதனால் கட்சியின் மத்தியக் குழுவில் இணைந்தவர் பின்னர், குருஷவையே அகற்றினார்.
Add Comment