83.ஜின்னாவின் முட்டுக் கட்டை
இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி 1946 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வைஸ்ராயிடமிருந்து நேருவுக்கு அழைப்பு வந்தது. இது முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வைஸ்ராய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் புறக்கணித்து அவமானப்படுத்தி விட்டதாக அவர் அறிக்கை விட்டார்.
அப்போதுகூட, “அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்குரிய ஆறு இடங்களை அவர்கள் விரும்பியபோது பெறலாம்” என்று வைஸ்ராய் உறுதி கூறினார். இதையே கடிததமாகவும் ஜின்னாவுக்கு எழுதினார். நேருவும், இணைந்து பணியாற்றிட வரும்படி ஜின்னாவுக்கு கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார். ஆனால், இதற்கெல்லாம் ஜின்னா செவி சாய்க்கவில்லை.
அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் பேசுகையில் நேரு “புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவை விடுவிப்பதும், பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதும், ஆடையின்றித் தவிக்கும் மக்களுக்கு ஆடைகளை வழங்குவதும் ஒவ்வொரு இந்தியனும் தன் திறனுக்கு ஏற்றவாறு தன்னை வளர்த்துக் கொள்ள முழு வாய்ப்பை வழங்குவதும் இந்த பேரவையின் முதல் பணியாகும். இது நிச்சயமாக ஒரு பெரிய பணி என்பதில் சந்தேகமில்லை. இன்று இந்திய மக்கள் மத்தியில் விரக்தி, அமைதியின்மையைக் காண்கிறோம். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கேள்வி ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பதுதான். இந்தப் பிரச்சனையை விரைவில் தீர்க்க முடியா விட்டால், நமது அரசியலமைப்பின் நோக்கமே பயனற்றதாகிவிடும்” என்று ஆழ்ந்த சிந்தனையுடன் பேசினார்.
Add Comment