12 – விண்வெளியில் கைகுலுக்கிய வல்லரசுகள்
ஜூன் 1973. வெள்ளை மாளிகை, வாஷிங்டன்.
அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், சோவியத் அதிபர் லியனிட் ப்ரியெஸ்னிவும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். இருவரின் கையெழுத்துகளுக்காக பல ஆவணங்கள் மேஜை மேல் காத்துக் கொண்டிருந்தன. திடீரென ப்ரியெஸ்னிவ் தனது பேனாவால் ஒரு தாளைக் குத்தி நன்றாகக் கிறுக்கிவிட்டு, நிக்சனைப் பார்க்கிறார். நிக்சனின் முகத்திலிருந்த புன்சிரிப்பு மாறுகிறது. வாய்விட்டு மேலும் சிரித்துவிட்டு, அவரும் இன்னொரு தாளில் வேகமாகக் கிறுக்குகிறார். இருவரும் அடுத்த ஐந்து வினாடிகளுக்கு சிரித்தபடியே, போட்டிபோட்டுக் கொண்டு கிறுக்குகிறார்கள். சுற்றிலுமிருந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள் அனைவரும் முதலில் ஆச்சரியமடைந்தாலும், பிறகு கைதட்டிச் சிரிக்கிறார்கள். கால் நூற்றாண்டு காலப் பனிப்போர் இளகியது.
அமெரிக்காவிற்கும், சோவியத்திற்குமிடையே போர்த்தந்திர படைக்கலக் கட்டுப்பாட்டு முதல் ஒப்பந்தங்கள் (SALT I) கையெழுத்தான பிறகு நடந்த சம்பவம் இது. இரண்டு ஆண்டுகாலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிறைவேறிய ஒப்பந்தம். இரண்டே விஷயங்கள் தான்:
1. பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொண்டு தாக்க, நாட்டிற்குள் இரண்டு தளங்கள் மட்டுமே அமைத்திருக்க வேண்டும்
2. இதற்குமேல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகள் போன்றவை புதிதாகத் தயாரிக்கப்படக் கூடாது.
Add Comment