தென்னகத்தின் சின்னத் திருப்பதி, ஏழைகளின் திருப்பதி… இப்படியாக அழைக்கப்படும் கோயில் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. அரியலூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கல்லங்குறிச்சி என்ற ஊரில் குடிகொண்டிருப்பவர்தான் கலியுக வரதராஜ பெருமாள். இக்கோயில் சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
1750-களில் மங்கான் என்ற விவசாயி வாழ்ந்தார். இவர் பசுக்கூட்டத்தையும் நிர்வகித்து வந்தார். அதில் ஒரு மாட்டின் மீது மட்டும் அதிகப் பிரியம் வைத்திருந்தார். அது சினைமாடு. மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் அந்த ஒரு மாடு மட்டும் திரும்பி வராமல் போனது. அவர் அதைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மனம் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தபோது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். ‘காணாமல்போன பசு இரண்டு மைல் தொலைவில் உள்ள ஆலமரத்திற்கும், மாவிலங்கை மரத்திற்கும் இடையில் உள்ள சங்குக் கொடி புதரில் கன்றுடன் உள்ளது’ என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை, கனவில் சொல்லப்பட்ட இடத்துக்குச் சென்றார் மங்கான். பசு கன்றுடன் நின்றிருந்தது. அங்கு சாய்ந்துகிடந்த ஒரு கல் கம்பத்தின்மீது பசு பால் சொரிந்து வைத்திருந்தது. அதில் நாமம் இருந்ததால் அதைப் பார்த்து வணங்கிவிட்டுப் பசுவையும் கன்றையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
Add Comment