13 – தேக்கநிலையும் அதிருப்தியும்
உண்மையை மக்களிடமிருந்து இம்முறை ஒளிக்க முடியவில்லை. தொலைத்தொடர்பு சாதனங்கள் சோவியத் மக்களுக்கு வெளியுலகை அறிமுகப்படுத்தின. தங்களின் வாழ்க்கைத் தரத்தை, பிறநாட்டு மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அறியாமை கொடுத்த பேரின்பங்களிலிருந்து மக்கள் மீளத் தொடங்கினர்.
விவசாயம் பாதிக்கப்பட, இயற்கை வளங்களும் குறைய ஆரம்பித்தன. மக்கள் தொகை குறைய, தொழிலாளர் வர்க்கமும் சரிந்தது. பொருளாதார வளர்ச்சி முந்தைய பத்தாண்டுகளைவிடப் பாதியாகக் குறைந்தது. தனிமனித இலாபத்தை மட்டுமே குறிவைத்து உற்பத்தியும், வணிகமும் கொடிகட்டிப் பறந்தது. வெளிநாட்டு வானொலி ஒலிபரப்புகள் அங்குள்ள மக்களின் இயல்பு நிலையை அறிவித்தன. கூடவே வெளிநாட்டுப் பொருட்களின் மேல் மோகத்தையும் உண்டாக்கின. சந்தைப்படுத்துதலை மேற்குலகிற்குச் சொல்லியா தரவேண்டும்? வெளிநாட்டுப் பொருட்களின் கள்ளச்சந்தை வெகுவேகமாக வளர்ந்தது. நாட்டின் இரண்டாம் பொருளாதார சந்தை எனக் கூறுமளவு வளர்ந்தது. இவற்றின் சட்டவிரோதப் பரிமாற்றம், ஊழலை விதைத்தது. அதிகாரிகளிடமிருந்து இப்போது ஊழல் மக்களிடையேயும் வேகமாகப் பரவியது. இதனால் கல்வியும், மருத்துவச் சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன.
Add Comment