பாடகர் அல்லாத சிங்களவரையோ, பருப்புக்கறி சமைக்காத சிங்கள வீட்டையோ தேடிக் கண்டுபிடிப்பது சிரமமானது என்பார்கள்.யார் வேண்டுமென்றாலும் எந்நேரத்திலும் கலைத்தாகம் முத்திப் போய் மைக் பிடித்துப் பாடிவிடும் நிலமை தான் அச்சமூகத்தில் என்றைக்குமிருக்கிறது.இந்த கலாசார செல்கள் மகிந்த ராஜபக்சேவுக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன..? மகிந்த வெறும் பாடகராய் மட்டும் இருக்கவில்லை. ‘நொமியன மினிஸ்ஸு (மரணிக்காத மனிதர்கள்) ‘ என்ற சிங்களப் படத்தில் ராணுவ ஜெனரல் வேடத்திலும், ‘உதாகிரி’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார்.
படம் மரணித்துப் போனதா, உதாகிரி ஊத்திக் கொண்டதா எதுவும் தெரியாது. 1989-ம் ஆண்டு இரண்டாவது பாராளுமன்றப் பிரவேசத்திற்கு முன்னரான காலத்தில் பெற்ற இத்தகு வெள்ளித்திரை, சின்னத்திரை அனுபவங்கள்தான் அவருக்கு அரசியலிலும் ஒப்பாரும் மிக்காருமற்ற நடிப்புத் திலகமாய் மிளிருமளவுக்குப் பின்னாளில் கைகொடுத்திருக்க வேண்டும். காரணம், ஜனாதிபதி பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சே அளவுக்கு மனித உரிமைப் போராளி ஆசியாவிலேயே கிடையாது. 2005-ம் ஆண்டு ஜனாதிபதியான பிறகு அவரை மிஞ்சிய வில்லன் அப்போதைய உலக அரசியலில் கிடையாது.
ஜே.வி.பியை ஜனாதிபதி பிரேமதாஸ சுவடு தெரியாமல் அழித்ததால் தென்னிலங்கை எங்கும் ஒரு அமானுஷ்ய நிசப்தம் நிலவியது.ஜே.வி.பி இன் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட அத்தனை பேருக்கும் ஆறடி ஆழத்தில் டிக்கட் கொடுத்து இருந்தார் பிரேமதாஸ. இதனால் பிரேமதாஸ ஆட்சி மீது தொழிற்சங்கங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும், அவ்வளவு ஏன்…. பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பெரும் அச்சம் நிலவியது. முன்னைய ஜே.ஆர் ஆட்சியில் குடியுரிமை பறிக்கப்பட்டு இருந்த சுதந்திரக் கட்சித் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மீண்டும் ‘தேசத்தின் பிரஜை’ அந்தஸ்துப் பெற்று பாராளுமன்றத் தேர்தலில் வென்று அப்போதுதான் எதிர்க்கட்சித் தலைவி என்ற மகுடம் சூடி இருந்தார். ஜே.ஆரின் வன்முறைகளாவது அரசியல் சாசனத்தின் ஓட்டைப் பக்கங்கள் வழியேதான் இருக்கும். பிரேமதாஸவைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆகவே வேடிக்கை பார்ப்பதைத் தவிர எதுவும் செய்ய முடியவில்லை ஸ்ரீமாவோவுக்கு.
Waiting for the next part