ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: Wilfrido H. Corral
தமிழில்: ராஜலக்ஷ்மி
சகோதரர் பார்தலோம் அரஸோலா, தான் வழிதவறிவிட்டதை உணர்ந்தபோது, தன்னை எதுவும் காப்பாற்றமுடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார். கௌதமாலாவின் சக்தி மிகுந்த காடு அவரைக் கருணையின்றி, மாற்றுதற்கிடமின்றி சிக்கவைத்துவிட்டது. இட அமைப்புகள் பற்றிய தன் அறியாமையின் முன் அவர் அமைதியாக உட்கார்ந்திருந்தார், சாவுக்காகக் காத்திருந்தபடி. அவர் அங்கு இறக்க விரும்பினார். நம்பிக்கையிழந்து, தனியாகத் தன்னுடைய எண்ணங்கள் தொலைதூர ஸ்பெயினின்மேல், குறிப்பாக லாஸ் அப்ரொஜோஸ் கான்வென்ட் மீது பதிந்திருக்க – அங்குதான் ஐந்தாம் சார்ல்ஸ் ஒரு முறை, தன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு இறங்கி வந்து, மீட்பளிக்கும் பணியில் இவர் காட்டிய சமய உத்வேகத்தின் மீது தான் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார்.
கண்விழித்தபோது, கருணையற்ற ஆதிவாசிகளின் குழு ஒன்று தன்னைச் சூழ்ந்திருப்பதைக் கண்டார். ஒரு பலி பீடத்தின் முன்னால் பலியிட அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்தப் பலிபீடம், பார்த்லோமுக்கு தன் பயங்களிலிருந்து, தன் விதியிலிருந்து, தன்னிலிருந்தே ஓய்வளிக்கக் கூடிய இடமாகத் தோன்றியது.
அப்பிரதேசத்தில் அவர் கழித்த மூன்று வருடங்கள், அந்நிலத்தைச் சேர்ந்தவர்களின் மொழிகள் பற்றிய போதுமான அறிவை அவருக்கு அளித்திருந்தது. அதில் ஏதோ ஒரு மொழியில் முயன்று பார்த்தார். அவர் பேசிய சில வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்டன.
அப்பொழுது அவருக்குத் தோன்றிய யோசனையை, அவர் தன்னுடைய திறமை, பிரபஞ்சக் கலாச்சாரம் மற்றும் அரிஸ்டாட்டில் பற்றிய உயர்ந்த அறிவுக்குத் தகுதியானது என்று நினைத்தார். அன்று சூரியனின் பூரண கிரஹணம் வரவிருப்பது அவர் நினைவுக்கு வந்தது. தன்னுடைய உள்ளார்ந்த எண்ணங்களில் இவ்வறிவைத் தன்னை அடக்கியாள்பவர்களை ஏமாற்றப் பயன்படுத்தித் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடிவெடுத்தார்.
Add Comment