டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்கே ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வழக்குகள், விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், குண்டு வெடிப்புகள், இழப்புகள், நீதிமன்றத் தீர்ப்பு இன்னபிற. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திட்டமிட்டபடி மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப்பட்டு இம்மாதம் 22ம் தேதி திறப்பு விழா அல்லது குட முழுக்கு விழா நடக்கவிருக்கிறது.
மசூதி இடிக்கப்பட்டது குறித்தும் அவ்விடத்தில் கோயில் கட்டப்படுவது குறித்தும் இச்செயல்பாட்டின் சட்ட ரீதியிலான, தார்மிக ரீதியிலான நியாய அநியாயங்கள் பற்றியும் நிறையப் பேசியாகிவிட்டது.
ஒரு பெரும்பான்மை சமூகத்தின் விருப்பம் நிறைவேற்றிக்கொள்ளப்படுகிறது என்பதற்கு அப்பால் இதில் ஒன்றுமில்லை. உலகின் மாபெரும் ஜனநாயக தேசத்தில் சிறுபான்மையினராகிவிட்ட ஒரு சமூகத்தின் துயரத்தின் மீது கட்டப்பட்ட கோயிலின் குடமுழுக்கு என்பதும் சேர்ந்தே வரலாற்றில் பதிவாகப் போகிறது என்பதிலும் ஐயமில்லை.
Add Comment