பூலேஷ்வரி தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும். எழுபதுகளின் பாட்னாவில் இன்று இருப்பதைப் போன்ற நவீன வாடகை வண்டி வசதிகள் எதுவும் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களின் காரில்தான் செல்லவேண்டும் அல்லது வாடகை ரிக்ஷா. பூலேஷ்வரியின் கணவரிடம், அவருடைய தொழில் நிமித்தம் தரப்பட்ட கார் அதுவும் ஒரு அம்பாஸிடர் இருந்தது. அதிலேயே அழைத்துச் சென்று விடலாம் என்று உறவினர்கள் எத்தனை சொல்லியும் கேளாமல் தன் மனைவியை வாடகை ரிக்ஷாவிலேயே அழைத்துச் சென்றார்.
உறவினர்களுக்கு அவருடைய அர்த்தமற்ற பிடிவாதம் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும்தான் ஏற்படுத்தியது. ஏனென்றால் பூலேஷ்வரியின் கணவர் கர்ப்பூரி தாக்கூர் தான், பாட்னாவைத் தலைநகராகக் கொண்ட பீகார் மாநிலத்தின் அன்றைய முதலைமைச்சர்.
குடும்பத்தின் அவசரத் தேவைகளைப் புரிந்து கொள்ளக்கூட எத்தனிக்காத அவருடைய அதீதப் பொறுப்புணர்ச்சி குறித்துக் கேட்டபோது, “நான் ஒரு முட்டாளாகக்கூட இருக்கக்கூடும், லௌகீகம் அறிந்த ஞானி அல்ல” என்று அப்போது தன்னை வரையறுத்துக் கொண்டார் கர்பூரி தாக்கூர்.
Add Comment