பத்தாண்டுகளுக்கு முன்னர் எடுத்த உத்தியோகபூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மியன்மர் நாட்டின் மக்கள் தொகை ஐம்பத்தொரு மில்லியன். தற்போது அது ஐம்பத்தைந்து மில்லியன்களை எட்டியிருக்கலாம். இதில் கிட்டத்தட்ட எண்பது சதவீதமானோர் புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள். கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து சமயம் போன்றவற்றைப் பின்பற்றும் சிறுபான்மையினரும் உள்ளனர். மியன்மர் நாடு பல்லின மக்களைக் கொண்டது. எட்டு முக்கிய இனக்குழுக்களும் அதன் கீழ் பல உப இனக் குழுக்களும் உண்டு. இவர்கள் பேசும் மொழியிலும் முக்கியமாக சின், கச்சின், கயின், ஷான் ஆகிய நான்கு மொழிகளும் அதன் பிரிவுகளாக நூற்று முப்பத்தைந்து வட்டார மொழிகளும் உள்ளதாக மியன்மர் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட கண்டனீஸ், மாண்டரின், உருது, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. இவை முக்கியமாக பிரிட்டிஷ் காலத்தில் குடியேறிய வெளிநாட்டவர்களால் பேசப்படும் மொழிகளாகும்.
இத்தனை வேறுபட்ட இன, மத, மொழி அடையாளங்கள் கொண்ட நாட்டில் ஆயுதம் தாங்கிய பல்வேறு இனக் குழுக்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன. இவற்றில் சிலவற்றின் பெயர்களில் அவர்கள் சார்ந்த இனப் பெயர் இருப்பது குறிப்பிடத் தக்கது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜனநாயக அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. எதிர்ப்புத் தெரிவித்த ஜனநாயக ஆதரவாளர்களை ராணுவத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஓரளவு வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் ராணுவ ஆட்சியாளர்கள்.
Add Comment