மகிந்த ராஜபக்சே, சந்திரிக்கா ஆட்சியில் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு மூலையில் போட்டு வைக்கும் வெறும் தும்புத்தடி போலத்தான் இருந்தார். தேர்தல்களில் வெல்ல வெறும் பிரசாரப் பீரங்கியாய் பயன்படுத்தப்படுவார். மற்றையக் காலங்களில் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாது. தான் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி இருக்கிறோம் என்பது எல்லோரையும்விட அவருக்கு நன்கு தெரியும்- என்றாலும் சொந்த விம்பத்தைப் பிரம்மாண்டமாக்கிக் கொள்ள கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் அவர் தவறவிடவே இல்லை.
இந்நிலையில் 1999-ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா தோற்பார் என்ற அபிப்பிராயமே எங்கும் மேலோங்கி இருந்தது. அவரது சமாதானப் பெக்கேஜ்கள் சந்தி சிரித்துக் கொண்டிருந்தன. விடுதலைப் புலிகளுக்குத் தீர்வு வழங்குவதா அல்லது யுத்தம் செய்வதா என்று பெரும் தடுமாற்றத்தில் அவர் இருந்தார். கருவூலத்தில் இருந்த டாலர்கள் மெல்ல மெல்லத் தேய்ந்து கொண்டு இருந்தன. தலைநகர் கொழும்பு தமிழர்களுக்கு மீண்டும் வேண்டாத பூமியாய் மாறி இருந்தது. முன்னணித் தமிழ் வர்த்தகர்களும், ஊடகவியலாளர்களும் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு சிங்கள தேசியவாத இயக்கங்கள் என்ற பேரில் இனவாதக் குழுக்கள் பகிரங்கமாய்த் தோன்றி தமிழ் வெறுப்பைக் கக்கத் தொடங்கி இருந்தன.
Add Comment