மனிதர்களுக்கு, பொருள்களுக்கு எல்லாம் எப்படிக் காலாவதி தினம் என்ற ஒன்று வருகிறதோ அப்படித்தான் போலிருக்கிறது, பாரம்பரியம் மிக்க இயக்கங்களுக்கும். கட்டுறுதி மிக்க, வலுவும் வீரியமும் உள்ள, மக்களைக் கவர்ந்திழுத்துத் தம் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் சாதுர்யம் மிக்கதொரு தலைமை இல்லாமல் காங்கிரஸ் என்னும் பேரியக்கம் கடந்த பத்தாண்டு காலத்தில் எவ்வளவு உருக்குலைந்துபோய்விட்டது என்று சிந்தித்தால் திகைப்பாக இருக்கிறது.
புனிதம், பரிசுத்தம், அக்மார்க் உலகத் தரத்தையெல்லாம் எந்த ஒரு அரசியல் கட்சியின் மீதும் ஏற்றிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு கலாசாரப் பின்னணி கொண்ட ஒரு பரந்த தேசத்தின் மக்களிடையே, பிரிவினையை விதைத்து அடித்துக்கொண்டு சாக வழி காட்டாத ஒரு தேசிய இயக்கம் என்ற அளவில் காங்கிரஸ் இங்கே முக்கியமாகிறது. தவிர ஜனநாயகம், மதச்சார்பின்மை என்கிற இந்நாட்டின் கட்டுமான அடித்தளத்தை ஆட்டம் காண வைக்காமல் சுதந்தரம் அடைந்த நாள் முதல் நல்லதும் அல்லாததுமாக நிறைய செய்து வந்திருக்கும் இயக்கம்.
Add Comment