‘பிரியமானவளே’ படத்தில் விஜய் தன்னை ஒப்பந்த முறைப்படி கல்யாணம் செய்து கொண்டதைச் சொல்லி நியாயம் கேட்டு உருக்கமாக நடித்திருப்பார் சிம்ரன். அவார்ட் எல்லாம் கொடுத்தார்கள். பஞ்சாபில் நிஜ வாழ்க்கை சிம்ரன்கள் காவல் நிலையத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். காலம் எப்படி மாறிவிட்டது பாருங்கள்…. கைவிடப்படும் கணவன்கள் என்று தலைப்பிட்டு மீடியாக்கள் செய்தி வெளியிடும் அளவுக்கு பஞ்சாபில் நிலைமை தலைகீழாகி விட்டது.
வெளிநாட்டில், குறிப்பாகக் கனடாவில் செட்டிலாக விரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை பஞ்சாபில் அதிகம். ஆண், பெண் இருபாலரின் வாழ்க்கை லட்சியம் கனடாதான். பன்னிரண்டாவது வரை படித்து IELTS தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் கனடாவில் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிக்கிறார்கள். 15 லட்சத்திலிருந்து 35 லட்சம் ரூபாய் வரை இதற்குச் செலவாகும். வீடு, நிலம் வைத்திருக்கும் பெற்றோர் விற்றுச் செலவு செய்து அனுப்பி வைத்தனர். பணம் இல்லாத ஆண், பணம் இருக்கும் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்கி அதைக் கொண்டு வெளிநாடு சென்றனர். IELTS நிச்சயங்கள் என்ற பெயரில் இது பிரபலமானது. கனடாவில் செட்டிலாகி இந்தியாவில் நிச்சயம் செய்த பெண்ணைக் கைவிடுவது ஒரு பிரச்சனையாக இருந்தது. கனடா அழைத்துச் சென்றாலும் அங்கே அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. இதுதொடர்பாகப் பல வழக்குகள் பதிவாகின. இதெல்லாம் சில வருடங்களுக்கு முந்தைய நிலை.
Add Comment