பாகிஸ்தானில் இம்ரான் கானுக்குப் போதாத காலம் எப்போதோ ஆரம்பமாகிவிட்டது. இப்போது நடப்பது, போதவே போதாத காலம். கட்டக்கடைசியாக அவர் செய்துகொண்ட மூன்றாவது திருமணம் இப்போது அவர் கழுத்தைப் பிடிக்கிறது. இஸ்லாமிய விதிமுறைகளை மீறி நடந்த திருமணம் என்பது குற்றச்சாட்டு. அதுசரி. ஒழித்துக்கட்டிவிடுவது என்று முடிவு செய்துவிட்ட பின்பு காரணம் கண்டுபிடிப்பதா கஷ்டம்?
ஆனால் ஒரு விஷயத்தில் பாகிஸ்தான் ஒரு முன்னோடி தேசம். உலகம் முழுதும் ஒரு குற்றத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்வது வழக்கம் என்றால், பாகிஸ்தானில் மட்டும்தான் கைது செய்து சிறையில் வைத்துவிட்டு என்ன குற்றச்சாட்டு சுமத்தலாம் என்று யோசிக்கத் தொடங்குவார்கள்.
சென்ற ஆண்டு இம்ரான் கான் மீது முதல் முதலில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது உணவுக்கு முன்னால் சூப் போல. பிறகு மெல்ல மெல்லப் புதிய குற்றச்சாட்டுகளை உருவாக்கி அவர்மீது அலங்கரித்து, எப்படியும் வெளியே வந்துவிடவே முடியாதபடி செய்யப் பார்த்தார்கள். அதன் இப்போதைய பரிமாண வளர்ச்சி, திருமணம் சார்ந்த குற்றச்சாட்டு.
Add Comment